சமீபத்தில் புவியியலாளர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களைக் கொண்டிருக்கும் கம்போடியாவின் காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்களின் சிதைவுகளைக்
கண்டு பிடித்துள்ளனர். க்மேர் இராச்சியத்துக்கு சொந்தமானவை எனக் கருதப் படும் இந்த நகரங்கள் லிடார் (Lidar) எனப்படும் வானில் இருந்து எடுக்கப் படும் லேசர் ஸ்கேனிங் தொழிநுட்பம் மூலம் வடிவமைக்கப் பட்டுள்ளன.
இந்த நகரங்களின் கட்டமைப்புக்களில் பல மரத்தால் ஆனவை என்பதால் அதிகம் சிதைவடைந்துள்ளதாகவும் இது தொடர்பான படங்கள் மிக சிக்கலாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. சான்றாக மிகச் சிறிய புற்று போன்ற படிமத்துக்கு அருகில் பெரிய கட்டட வேலைப் பாடுகள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய மதக் கட்டட அமைப்பான கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயங்களுக்கு ஒவ்வொரு வருடமும் இலட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகளால் தற்போது கண்டு பிடிக்கப் பட்ட நிலக்கீழ் நகரங்கள் மற்றும் பண்டைய குடியேற்றம் என்பன இன்னும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடும் என்றும் நம்பப் படுகின்றது.
மேலும் இந்த மறைந்துள்ள சாம்ராஜ்ஜியம் அங்கோர்வாட் ஆலயக் கட்டடங்கள் ஆரம்பத்தில் இப்போது இருப்பதை விட இன்னமும் விரிந்து பரந்து இருந்ததைச் சுட்டிக் காட்டுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் 15 ஆம் நூற்றாண்டில் இக்கட்டடம் எழுப்ப பட்ட தருணத்தில் இக்குடியேற்றத்தை ஏற்படுத்திய க்மேர் சாம்ராஜ்ஜியம் அப்போதைய காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச் சக்தி வாய்ந்த அரசாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அங்கோர்வாட் ஆலயப் பகுதிகள் ஐ.நா சபையின் யுனெஸ்கோ சார்பாக உலக வரலாற்று சிறப்பு மிக்க தலமாக பதியப் பட்ட இடங்களில் ஒன்றாகும்.