செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’

‘மங்கள்யான்’ விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோமீற்றர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது. நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மங்கள்யான் விண்கலம் புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் உள்ள வண்ணப் புகைப்பட கமரா எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

தற்போது மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் இஸ்ரோவின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. 7300 கிலோமீற்றர் உயரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று இஸ்ரோ பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா? அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது? அங்கு மீத்தேன் வாயு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக 450 கோடி ரூபா (இந்திய ரூபாய்) செலவில் மங்கள்யான் விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைக்கும். மேலும், படங்களையும் எடுத்து அனுப்பி வைக்கும். மங்கள்யானின் ஆயுட்காலம் 6 மாதங்கள் ஆகும். அதுவரை அது செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி தனது பணியை வெற்றிகரமாக மேற்கொள்ளும்.

மங்கள்யான் விண்கலத்தின் செயற்பாடுகள் பெங்களூரை அடுத்து பைலாலு, அமெரிக்காவில் உள்ள கோல்ட்ஸ்டோன், ஸ்பெயினில் அமைந்துள்ள மட்ரிட், அவுஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா ஆகிய 4 இடங்களில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை!

ரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர

இந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ

புதிய தொகுப்புகள்