காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 6ம் தேதி பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உறவில் சிக்கல் பெரிதாகி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன், இரு நாடுகளும் விரும்பினால் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஐநா உதவ தயாராக உள்ளது என்று தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், பான் கி மூன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருவரும் இணைந்து இஸ்லாமாபாத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நவாஸ் ஷெரீப் கூறியதாவது:
அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐநா சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். இந்தியாவுடன், பாகிஸ்தான் நட்புறவை மீண்டும் தொடர விரும்புகிறது. பாகிஸ்தான் மக்களும் அதைதான் எதிர்பார்க்கிறார்கள். நடந்து முடிந்த சம்பவங்களை மறந்து இரு நாடுகளுக்கு இடையே புதிதாக நட்புறவு ஏற்படுத்த தயாராக இருக்கிறோம்.
இந்திய - பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமைதி, நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இருநாட்டு தலைவர்களின் விருப்பமாக உள்ளது என்பதை நினைவுப்படுத்துகிறேன். இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனியாக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய செய்தியில், 'இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள எல்லா பிரச்னைகளையும் அமைதியான முறையில் தீர்த்து நட்புறவை மேம்படுத்தவே பாகிஸ்தான் விரும்புகிறது' என்று தெரிவித்துள்ளார்.