சுவிட்சர்லாந்து நாட்டில் இரத்ததானம் செய்வதற்கு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என பலத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சுவிஸில் ஓரினச்சேர்க்கையாளர்கள்(Gay) மற்றவர்களுக்கு ரத்த தானம் செய்ய இயலாது. இது பிற மக்களிடமிருந்து ஓரினச்சேர்க்கையாளர்களை பாகுபாடு பார்த்து பிரிப்பது போல் உள்ளது என ஓரினச்சேர்க்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சுவிஸின் Blood Donation SRK என்ற அமைப்பு ஓரினச்சேர்க்கையாளர்களும் பிற மக்களை போல் ரத்த தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை இறுதி முடிவினை தீர்மானிக்கும் Swissmedic துறையும் அங்கீகரிக்க வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக இயங்கி வரும் Pink Cross என்ற அமைப்பு இந்த கோரிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால், இதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றால், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்ற ஆண்களுடன் குறைந்தது ஒரு வருட காலம் உறவு வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன.
இதனை ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் 2017ம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் இரத்ததானம் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுவார்கள்.
சுவிஸில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்பட்டால், இது அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிலும் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.