குழாய் வழியாக வீட்டுக்குள் வரும் பீர்: ஒருமுறை பணம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் இலவச
பெல்ஜியத்தின் புரூகெஸ் நகரில் உள்ள தீவிர பீர் விரும்பிகள் சிலர் ஒன்றிணைந்து குழாய் வழியாக வீட்டுக்குள் பியர் வரவழைக்கும் விசித்திர முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக புரூகெஸ் மக்கள் 400 பேர் இணைந்து நிதி திரட்டி இந்த முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளனர்.
இந்த விசித்திர திட்டம் குறித்து சேவியர் வனஸ்டெ என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்த முனைப்பு காட்டியுள்ளாராம்.
புரூகெஸ் நகரமானது UNESCO அமைப்பால் பாரம்பரிய பகுதியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மக்களின் பீர் தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான லொறிகளில் பீர் எடுத்து வருவதால் அது நகரின் பாரம்பரிய சாலைகளை சிதைப்பதாக இங்குள்ள மக்கள் கருதி வந்தனர்.
இதனால் மது ஆலைகளில் இருந்து குழாய் வழியாக பீரை நகருக்குள் கொண்டுவந்தால் என்னவென யோசித்ததில் கிடைத்த திட்டந்தான் தற்போது செயல்முறை வடிவம் பெற்றுள்ளது.
இந்த விசித்திர திட்டத்திற்கு நிதி திரட்டுவது ஒன்றும் கடினமானதாக இருக்கவில்லையாம், பீர் பிரியர்கள் தாராள மனதுடன் ஆயிரக்கணக்கில் டொலர்களை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் தவணையாக மணிக்கு 4000 லிற்றர் பீர் குழாய் வழியாக பெருக்கெடுக்க உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து 7,500 யூரோ வழங்கும் வாடிக்கையாளருக்கு வாழ்நாள் முழுவதும் புரூகெஸ் சாட் எனப்படும் பீர் வழங்கப்படுமாம்.
பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி துவங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வியப்பளிக்கும் வெற்றியை பெற்றுள்ளது மட்டுமல்ல, மொத்த முதலீட்டில் 10 விழுக்காடு நிதியை பொதுமக்களே வழங்கியுள்ளனர்.
இந்த விசித்திர திட்டத்தினால் ஆதாயம் தேடிக்கொள்வது மட்டுமல்ல, பாரம்பரிய சின்னமாக பாதுகாக்கப்பட்டு வரும் புரூகெஸ் வீதிகளில் பீர் லொறிகளின் வருகையும் குறையும், மட்டுமின்றி உருளைக்கல் (Cobblestone) பதிக்கப்பட்டுள்ள தெரு வீதிகள் சேதமடைவதையும் தவிர்க்கலாம் என கூறுகிறார் இந்த திட்டத்தின் சூத்திரதாரர் சேவியர்.