பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 54 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சமீபகாலமாக ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் நிகழ்ந்த தற்கொலை படைத்தாக்குதலில் 54 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியான அல்சாப் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் சாலையோரத்தில் திடீரென குண்டு வெடித்தது. தொடர்ந்து தற்கொலை படையை சேர்ந்த பெண் தீவிரவாதி ஒருவர் கூட்டத்திற்குள் ஊடுருவி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயம் அடைந்தனர்.
இதேபோல் டோரா பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது. இதில் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர். மேலும், 22 பேர் காயம் அடைந்தனர். பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சதார் நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டத்தில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் ஓட்டிவந்த கார் புகுந்து வெடித்து சிதறியது.
இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை இயற்கை எரிவாயு பிளாண்டில் ஐஎஸ் தீவிரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.