ஜெனிவா, உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட உள்நாட்டு கலவரங்களால் வெவ்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை 4.08 கோடியாக உயர்ந்துள்ளது என ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் புலம்பெயர்ந்துள்ள மக்களின் விவரங்கள் குறித்த ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஜெனிவாவை மையமாக கொண்டு செயல்படும் புலம் பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் அதனை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் போரினால் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை 4.08 கோடியாக உயர்ந்துள்ளது. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு மட்டும் அதிக அளவில் புலம்பெயர்வு நடைபெற்றுள்ளது. 2015-ம் ஆண்டில் மட்டும் 86 லட்சம் மக்கள் ஏமன். சிரியா,ஈராக் உள்ளிட்ட நாடுகளில் தலைதூக்கியுள்ள போர் காரணமாக புலம்பெயர்ந்துள்ளனர்.
அதில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மட்டும் 48 லடசம் பேர் அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். இதில் ஏமன் நாட்டில் இருந்து மட்டும் 22 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். சிரியாவில் இருந்து 13 லடசம், ஈராக்கில் இருந்து 11 லட்சம் மக்களும் புலம்பெயர்ந்துள்ளனர். சவுதிஅரேபிய அரசின் கூட்டுப்படைகளால் மட்டும் ஏமன் நாட்டில் 6,427 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டுகிறது.
மேலும் 5 ஆண்டுகளாக தொடரும் சிரியாவின் உள்நாட்டு கலவரங்களால் 2,70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றது அந்த அறிக்கை. 1.92 கோடி மக்கள் பேரழிவு காரணமாக அகதிகளாக மாறி உள்ளனர். இந்தியா, சீனா மற்றும் நேபாளம் முறையே 37 லடசம், 36 லட்சம் மற்றும் 26 லட்சம் மக்கள் அகதிகளாகி உள்ளனர். போர் பதற்றம் மற்றும் இயற்கை பேரழிவு காரணமாக மட்டும் கடந்த ஆண்டில் 2.78 கோடி மக்கள் மொத்தமாக அகதிகளாகி உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.