திங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில் தலிபான்கள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தி 250 கைதிகளை மீட்டுச் சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது பாகிஸ்தான் போலிசார் தப்பிச் சென்ற கைதிகளில் 41 பேரைக் கண்டுபிடித்து மீளக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பல சிறைகளில் பாதுகாப்பு உறுதியாக உள்ளதா என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் தோன்றியுள்ள வேளையில் பாதுகாப்பு அதிகாரிகள் பாகிஸ்தானின் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள முக்கிய குற்றவாளிகளை அதிக பாதுகாப்பு வசதியுடைய சிறைச்சாலைகளுக்கு மாற்றியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சு கருத்துத் தெரிவிக்கையில் பஞ்சாப் மற்றும் கராச்சியில் உள்ள முக்கிய சிறைச்சாலைகளில் சிறைக் கட்டடங்கள் உறுதிப் படுத்தப் பட்டதாகக் கூறியுள்ளது. இச்சிறைச் சாலைகளில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகல் அடைக்கப் பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் மிக அஜாக்கிரதையாக நடந்து கொண்ட 25 தொடக்கம் 28 போலிஸ் அதிகாரிகள் பணியிறக்கம் செய்யப் பட்டுள்ளனர். இதேவேளை இவ்வளவு எளிதாக தலிபான்கள் பெருமளவில் சிறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி கைதிகளை எவ்வாறு கடத்திச் செல்ல முடியும் என பாகிஸ்தான் பொது மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். மேலும் சம்பவம் நிகழ்ந்த போது இராணுவ வீரர்கள் மிகத் தாமதமாகவே குறித்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.
இந்த மோசமான தாக்குதலில் 6 போலிஸ் அதிகாரிகள் உட்பட 14 பொது மக்கள் கொல்லப் பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.