இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 55 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே வாகா எல்லை உள்ளது. இந்த எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது.
அணிவகுப்புடன் கூடிய அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட தயார் ஆயினர்.
அப்போது அங்கே வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த இரும்பு ‘கேட்’ மீது மோதி, தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அப்போது அந்தப் பகுதியே அதிர்ந்தது.
எங்கும் ஒரே மரண ஓலம் கேட்டது. அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே ரத்த களறியாக காணப்பட்டது. மனித உடல் உறுப்புகள் சிதறி கிடந்தன.
அப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை உள்ளூர் டி.வி. சேனல்கள் படம் பிடித்து காட்டின.
சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும்.
இத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளதுடன் இந்த தாக்குலை தாமே மேற்கொண்டதாக மற்றுமொரு ஆயுதக் குழுவொன்றும் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் எல்லைப் பாதுகாப்பு உறுப்பினர்களும் அடங்கியுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வஹா எல்லைப் பகுதியில் தேசிய கொடிகளை இறக்கும் நிகழ்வினை பார்வையிட பலர் ஒன்று கூடுவதாக சர்வதேச தகவல்கள் குறிப்படுகின்றன.
சம்பவ இடத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து சீல் வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பஞ்சாப் மாகாண அரசுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.