அமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டது பெண் அதிபரை மக்கள் தேர்வுசெய்யத் தயாராக உள்ளார்கள் என மிச்சேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அது அப்படி இருக்கையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, நாட்டின் மிக உயரிய பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமனமாக வேண்டிய தருணம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
யாராக இருந்தாலும் சரி போட்டியிடுபவர் திறமை வாய்ந்தவர்களாக இருந்தால், அவரை மக்கள் ஏற்கத் தயாராக உள்ளனர்.
மேலும் நிறம், இனம், பொருளாதார நிலை என திறமைக் கொண்டவர்களிடம், மக்கள் எந்த பாகுபாட்டையும் பார்க்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அப்படிப்பட்ட திறமை வாய்ந்த ஒரு பெண் அதிபராக தேர்வாக வாய்ப்பு உள்ளது.
அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று மிச்சேல் ஒபாமா, ஹிலாரி கிளின்டனின் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவான ஒரு பதிலை மிச்சேல் கூறியதால், நீங்கள் அரசியலுக்கு வரமாட்டீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தாம் அரசியலுக்கு வருவதற்கான சாத்தியம் உண்டு என்கின்ற ரீதியில் பதில் அளித்தார்.