ஃபுக்குஷிமா அணு உலையிலிருந்து கதிரியக்க நீர் கசிந்தது

ஜப்பானில் ஃபுக்குஷிமா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த கடும் மழை காரணமாக, அணுமின் நிலையத்திலிருந்து கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்குள்ளான நீர் எதிர்பாராதவிதமாக கசிந்து வெளியேறியுள்ளதாக ஃபுக்குஷிமாவை நிர்வகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும், அதன்தொடர்ச்சியாக சுனாமி பேரலைகளிலும் சிதைவடைந்த ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருட்கள் நீரில் வெளியேறுவதை தடுப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

எனினும் கடுமையான நச்சுத்தன்மை மிக்க கதிரியக்கத் தாக்கத்துக்குள்ளான இரசாயனப் பொருட்கள் (isotope Strontium-90) அதிகளவில் கலந்த நீர் நேற்றைய மழையில் கசிந்து வெளியேறிவிட்டதாக டோக்யோ இலக்ட்ரிக் பவர் நிறுவனம் கூறுகிறது.

அணுமின் நிலையத்தின் சேதமடைந்த அணுஉலைகளிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் கலந்த குளிர்நீர் வெளியேறாமல் அடைத்துவைத்திருந்த தடுப்பு சுவர்களையும் தாண்டி வெளியேறிவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

நச்சுக் கழிவுப் பொருட்களை பாதுகாப்பாக சுத்திகரிக்கக்கூடிய சட்டரீதியான அளவினை விட 70 மடங்கு அதிகமாக இந்த ஸ்ட்ரோன்டியம்- 90 (Strontium-90) அந்த நீரில் பதிவாகியுள்ளதாக டோக்யோ இலக்ட்ரிக் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நச்சுப் பொருள் கலந்த நீர் நிலத்துடன் ஓரளவு கலந்திருக்கின்றபோதிலும், அருகிலுள்ள பசிபிக் சமுத்திரத்தில் கலந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

அணு உலைகள் செயற்படும்போது யுரேனியமும் புளூட்டோனியமும் சேர்ந்து நடக்கின்ற இரசாயனத் தாக்கத்தின் கழிவுப் பொருளாக ஸ்ட்ரோன்டியம்-90 வெளியாகிறது.

இந்த நச்சுப்பொருள் மனித உடலில் இலகுவில் ஊடுறுவக்கூடியது, அத்துடன் அது எலும்புப் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

(BBC)

You may also like ...

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!

வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப

கண்ணின் நீர் அழுத்தம் (கிளக்கோமா)

பெரும்பாலும் வயதான காலத்தில் சில நோய்களின் தாக்கத்

புதிய தொகுப்புகள்