வானிலையை துல்லியமாக கணிக்கும் இந்தியாவின் இன்சாட் 3டி செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பிரெஞ்ச் கயானாவின் கோக்ரு ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை 1,24க்கு செயற்கைக்கோளை தாங்கிச் சென்ற ஏரியன் 5 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 32 நிமிடம் 42 வினாடிகளில் இன்சாட் 3டி செயற்கைக்கோள்
அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. செயற்கைக்கோளின் சூரியமின் சக்தி உடனடியாக செயல்பாட்டிற்கு வந்ததாகவும் கர்நாடக மாநிலம் ஹாசனிலுள்ள இஸ்ரோ பிரிவின் கட்டுபாட்டிற்குள் தற்போது விண்ணில்
ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் வந்துள்ளதாகவும் இஸ்ரோவின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இன்சாட் 3டி செயற்கைக்கோளின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது. செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள 19 சானல்களை கொண்ட வளிமண்டல ஒலி சாதனத்தின் மூலம் வானிலையை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. வெப்பநிலை, ஈரப்பதம், ஓசோன் மண்டலம் ஆகியவற்றின் அவப்போதைய நிலை பற்றிய விவரங்களை இன்சாட் 3டி செயற்கைக்கோள் அனுப்பும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.