தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், விமானப் படை வீரராக பணியாற்றுபவர் அமசிபுன் காமர்ரா (31).
கடந்த 8 ஆண்டுகளாக இவர் பெரு விமானப்படையில் பணியாற்றி வருகிறார். பெருவின் தென்பகுதியில் உள்ள அரிகியுபா என்ற இடத்தில் விமான சாகசப் பயற்சிக்காக அமசிபுன் ராணுவ விமானத்தில் இருந்து, 5,000 அடி உயரத்தில் இருந்து குதித்தார். அப்போது, விரிந்த பாரா சூட்டின் கயிறுகள் அவரது கழுத்தை சுற்றி இறுக்கியது. இதனால் நினைவிழந்த அவர், சடாரென கீழே விழத் தொடங்கினார். விழுந்த அவரை, மற்றவர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அமசிபுன்னுக்கு பலவித மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அங்கு அமசிபுன்னை பரிசோதித்த டாக்டர் கில்லெர்மோ பசேகோ கூறுகையில், ‘அமசிபுன் பாராசூட் கயிறுகள் கழுத்தை இறுக்கியதால் உணர்விழந்தார். இந்நிலையில் கீழே விழுந்த அவருக்கு ஒரு சிறு காயமோ, எலும்பு முறிவோ ஏற்படவில்லை. இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தவர் உயிரோடு இருப்பது அதிசயம். கடவுள் அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்’ என்றார்.