பங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வாக்குப்பதிவுகள், அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்காக 40,000க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெண்ணும் பணிகளை துரிதகதியில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
300 சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள இந்தத் தேர்தலில், 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 1,841 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷில் இடம்பெறும் 11 ஆவது பொதுத்தேர்தலில், நாடளாவிய ரீதியில் 6 இலட்சம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷில் முதன்முறையாக இம்முறை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளதுடன், இணைய சேவைகள் இன்று நள்ளிரவு வரை முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தேர்தல் நடவடிக்கைகளின்போது வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் KM Nurul Huda தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பங்களாதேஷில் கடந்த 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளினால் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 2,682 பேர் காயமடைந்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட 16 மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
மேலும் , ஜனநாயக ரீதியிலானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துமாறு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீஷியா ஸ்கொட்லாண்ட், கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.