கடந்த 14 ஆம் திகதி உலக கிண்ண கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகியது. இப் போட்டிகளில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன.
பங்கேற்றுள்ள நாடுகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதியுடன் ´லீக்´ போட்டிகள் நிறைவடைந்தன.
இதன் முடிவில் 16 நாடுகள் 2 வது சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் 2 வது சுற்றின் நிறைவில் பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
இதன் அடிப்படையில் கால்இறுதி போட்டிகளின் ஒன்றான பிரான்ஸ் - உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி Nizhny Novgorod மைதானத்தில் இன்று (06) நடைபெற்றது.
இதில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி உருகுவே அணியை வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரேசில் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையே இன்று மற்றுமொரு கால்இறுதி போட்டியும் நடைபெறுகிறது.
மேலும், நாளை 7 ஆம் திகதி இங்கிலாந்து - சுவீடன், ரஷ்யா - குரோஷியா அணிகளுக்கு இடையிலான இரண்டு கால்இறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
அரையிறுதி போட்டிகள் 10 மற்றும் 11 ஆம் திகதியும், இறுதிப்போட்டி 15 ஆம் திகதியும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.