உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கிண்ண கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
இறுதியாக 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கிண்ண போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி வாகை சூடியது.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று (14) ஆரம்பமாகிறது.
இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ´நாக்-அவுட்´ என்ற 2 வது சுற்றுக்கு முன்னேறும்.
இந்த உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பில் ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய அணிகள் முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 255 கோடியும் 2 வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 188 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
முதல் நாளான இன்று நடக்கும் தொடக்க லீக் போட்டியில், போட்டியை நடத்தும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் (ஏ பிரிவு) மொஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் மோதவுள்ளன.
உலக கிண்ண போட்டியில் 4 வது முறையாக விளையாடும் ரஷ்யா உலக தரவரிசையில் 70 வது இடம் வகிக்கிறது.
5 வது முறையாக உலக கிண்ணத்தில் கால்பதிக்கும் சவுதி அரேபியா அணி தரவரிசையில் 67 வது இடத்தில் இருக்கிறது.