கடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் ஆரம்பமாகின்றது
இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து இந்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டி இடம்பெற்று வருகின்றது.
இம்முறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் (கொமன்வெல்த் விளையாட்டு) 6, 600 வீர வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.
இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளில் ஆண் பெண் இருபாலாருக்கும் சரிசமமான தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி அவுஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நாளை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.
இம்முறை 21 ஆவது தடவையாக இடம்பெறும் கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
பெண்கள் ரக்பி, பீச் வொலிபோல் ஆகிய போட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்காளதேஷ், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, மலேசியா, இலங்கை உட்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.
இதில் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா அதிகபட்சமாக 474 வீரர்-வீராங்கனைகளை களம் இறக்குகிறது. இந்த போட்டியை பொறுத்தமட்டில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே பெரும்பாலும் பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப்பிடித்து வருகின்றன.
வரலாற்றில் முதன்முறையாக
வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுப் போட்டிகளில் ஆண் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் சமமான பதக்கங்களை வழங்கும் முறையை கோல்ட் கோஸ்ட் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் ஆண்கள் பிரிவுகளிலேயே அதிகளவான தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இம்முறை சரிக்கு சமமாக இந்த பதக்க எண்ணிக்கை போட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டித் தொடரிலும்கூட இந்த சமப் பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன்படி இம்முறை மொத்தம் 275 தங்கப்பதக்கங்கள் பகிரிந்தளிக்கப்படவுள்ளன. இதில் 133 ஆண்களுக்கான போட்டிகளும் 133 பெண்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு 133 பதக்கங்கள் வீதம் இருபாலருக்கும் சரிசமமாக வழங்கப்படவுள்ளன. ஏனைய 9 பதக்கங்கள் இருபாலாரும் பங்கேற்கும் கலப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் வாய்ப்பை தட்டிப்பறித்த கோல்ட் கோஸ்ட்
2018 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவது எந்த நகரம் என்ற போட்டியில் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகருமே மோதின. இதில் ஹம்பாந்தோட்டை நகரம் 27 வாக்குகளைப் பெற கோல்ட் கோஸ்ட் நகரம் 43 வாக்குகளைப் பெற்று போட்டியை வாய்ப்பை இலங்கையிடமிருந்து பறித்துக்கொண்டது.
வரலாறு
கொமன்வெல்த் போட்டிகளானது முதன்முதலில் பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் என்ற பெயரில் 1930ஆண்டு ஹமில்டனில் நடத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு 1954ஆம் ஆண்டு இப்பெயரானது பிரித்தானியப் பேரரசு மற்றம் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்று மாற்றம்பெற்றது. மீண்டும் 1970 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் என மாற்றப்பட்டது. அதன்பிறகு 1978 ஆம் ஆண்டு முதல் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரால் அதிகார்பூர்வமாக நடத்தப்பட்டு வருகின்றது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 71 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐக்கிய இராச்சியம் நான்கு அணிகளாக பிரிந்து இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றன. ஆனாலும் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாட்டு அணியாக கலந்துகொள்ளும் ஐக்கிய இராச்சியமானது இதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவையாக பிரிந்துள்ளது. அதேபோல் அவுஸ்திரேலியாவும் இரண்டு அணிகளை அனுப்புகின்றது. அதேபோல் நியூஸிலாந்து அணிகள் இரண்டும் கலந்துகொள்கின்றன.