பாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
அங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் மைதானத்தில் கூட்டம் அலைமோதியது. இதில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பக்கர் ஜமான், பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். பாபர் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜமான் உடன் ஹுசைன் தலாட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். ஜமான் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து தலாட் உடன் தலைவர் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தார். தலாட் 41 ஓட்டங்களிலும், சர்பராஸ் 38 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஷோயிப் மாலிக், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் குவித்தது. மாலிக் 14 பந்துகளில் 37 ஓட்டங்களுடனும், பஹீம் 9 பந்துகளில் 16 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட்விக் வால்டன், அண்ட்ரே பிளெட்சர் ஆகியோர் களமிறங்கினர். பிளெட்சர் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வால்டன் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் மேற்கிந்திய அணி 13.4 ஓவரில் 60 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் மார்லன் சாமுவேல்ஸ் அதிகபட்சமாக 18 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொகமது நவாஸ், மொகமது ஆமிர், ஷோயிப் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணியின் ஹுசைன் தலாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.