ஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத் - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
ஐ.பி.எல். தகுதி சுற்று
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
இந்த நிலையில் இறுதிசுற்றுக்குள் நுழையும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் குஜராத் லயன்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.
பந்து வீச்சு பலம்
டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி இதே மைதானத்தில் வைத்து தான் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தாவை புரட்டியெடுத்தது. முக்கியமான நேரத்தில் யுவராஜ்சிங் 44 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். இதனால் ஐதராபாத் வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. கேப்டன் டேவிட் வார்னர் (7 அரைசதத்துடன் 686 ரன்), ஷிகர் தவான் (473 ரன்)ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருப்பது ஐதராபாத்துக்கு சாதகமான விஷயமாகும்.
ஊதா நிற தொப்பியை தன்வசப்படுத்தியுள்ள புவனேஸ்வர்குமார் (21 விக்கெட்), முஸ்தாபிஜூர் ரகுமான் (16 விக்கெட்), பரிந்தர் ஸ்ரன் (13 விக்கெட்) ஆகிய வேகப்பந்து வீச்சு சூறாவளிகளே ஐதராபாத்தின் பிரதான அஸ்திரம். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளம் வேகமின்றி மந்தமாக காணப்பட்ட போதிலும் ‘ஷாட்பிட்ச்’ மற்றும் ‘யார்க்கர்’ வகை தாக்குதலை சரியான நேரத்தில் தொடுத்து கலக்கினர். ஒருங்கிணைந்து ஆடும் பட்சத்தில் ஐதராபாத் அணியின், ‘கன்னி இறுதிசுற்று கனவு’ நனவாவது நீண்ட தூரமில்லை.
குஜராத் எப்படி?
அறிமுக அணியான குஜராத் லயன்சும் லேசுப்பட்டது அல்ல. அந்த அணியில் பிரன்டன் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், வெய்ன் சுமித், வெய்ன் பிராவோ, கேப்டன் சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், என்று சரவெடிக்கு பெயர் போன வீரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆனால் ஆட்டம் தொடர்ந்து சீராக இல்லை. திடீரென சறுக்கி விடுகிறார்கள். இது மிக முக்கியமான ஆட்டம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள்.
இந்த ஐ.பி.எல்.-ல் குஜராத் அணி புள்ளி பட்டியலில் 9 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது. அதே சமயம் அந்த அணி இந்த சீசனில் ஒரே ஒரு அணியை மட்டும் தோற்கடித்ததில்லை. அந்த அணி ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகும். ஐதராபாத்துக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் முறையே 5 விக்கெட் மற்றும் 10 விக்கெட் வித்தியாசங்களில் படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்க குஜராத் அணிக்கு அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. முதலாவது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் வெற்றிக்கனியை கோட்டைவிட்ட குஜராத் அணி 2-வது வாய்ப்பையாவது பயன்படுத்திக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: ஆரோன் பிஞ்ச், பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், வெய்ன் சுமித், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, திவேதி, பிரவீன்குமார், தவால் குல்கர்னி, ஷிவில் கவ்ஷிக் அல்லது பிரவீன் தாம்பே.
ஐதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஷிகர் தவான், மோசஸ் ஹென்ரிக்ஸ், யுவராஜ்சிங், தீபக் ஹூடா, நமன் ஓஜா, பென் கட்டிங், புவனேஸ்வர்குமார், பரிந்தர் ஸ்ரன், முஸ்தாபிஜூர் ரகுமான், பிபுல் ஷர்மா அல்லது கரண் ஷர்மா.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.