புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 162 ரன்கள் சேர்த்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடத்தை பிடித்த அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் நேற்றிரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) சந்தித்தன. இரு அணியிலும் தலா இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஐதராபாத் அணியில் கரண் ஷர்மா, வில்லியம்சன் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் பென் கட்டிங், பிபுல் ஷர்மா இடம் பெற்றனர்.
கொல்கத்தா அணியில் ஷகிப் அல்-ஹசன், அங்கித் ராஜ்பூத் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மோர்னே மோர்கல், சதீஷ் சேர்க்கப்பட்டனர். காயம் குணமடையாததால் இந்த ஆட்டத்திலும் கொல்கத்தா ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் ஆடவில்லை.
‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கம்பீர், முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து கேப்டன் டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஐதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மோர்கலின் 2-வது ஓவரில் தவான் (10 ரன்) போல்டு ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஹென்ரிக்ஸ் ஆட வந்தார். ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 4 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் கம்பீர் வீச வைத்தார். பவர்-பிளேயில் ஐதராபாத் ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
யுவராஜ் 44 ரன்
அணியின் ஸ்கோர் 71 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பிரித்தார். அவரது ஒரே ஓவரில் ஹென்ரிக்ஸ் (31 ரன், 21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டேவிட் வார்னர் (28 ரன், 3 பவுண்டரி) இருவரும் வீழ்ந்தனர். இதன் பின்னர் யுவராஜ்சிங்கும், தீபக் ஹூடாவும் இணைந்து நன்றாக விளையாடினர். ஆனால் துரதிர்ஷ்டம், ரன்வேகத்தை தீவிரப்படுத்த ஆரம்பித்த சமயத்தில் இவர்கள் பிரிந்து விட்டனர். தீபக் ஹூடா (21 ரன், 13 பந்து, 2 சிக்சர்) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த பென் கட்டிங் (0) முதல் பந்திலேயே வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து யுவராஜ்சிங்கும் (44 ரன், 30 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிளீன் போல்டு ஆக, ரன்வேகம் தளர்ந்து போனது. கடைசி ஓவரில் பிபுல் ஷர்மா 2 சிக்சர் தூக்கியதால் ஐதராபாத் அணி 160 ரன்களை கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஹோல்டர், மோர்கல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
கொல்கத்தாவுக்கு 2 விக்கெட்
அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. 9 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி ராபின் உத்தப்பா (11 ரன்), காலின் முன்ரோ (16 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கம்பீர் 28 ரன்களுடனும், மனிஷ் பாண்டே 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.