டி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்படுவது முட்டாள்தனமானது என்று ரைசிங் புனே சுப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சாடியுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்களை மாத்திமே குவிக்க, மழை காரணமாக கொல்கத்தா அணிக்கு 9 ஓவர்களில் 66 ஓட்டங்கள் இலக்கு டக்வர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.
இதில் உத்தப்பா, கம்பீர் ஆகியோரை அஸ்வின் முதல் ஓவரிலேயே வீழ்த்தினாலும் யூசுப் பதான் 18 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 37 ஓட்டங்களை விளாச கொல்கத்தா அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களை எடுத்து வென்றது.
இது குறித்து புனே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “டக்வர்த் லூயிஸ் முறை மிக மோசமானது. டக்வர்த் லூயிஸ் முறை நடைமுறைப்படுத்திய உடன் ஆட்டம் முடிந்து விடுகிறது. நான் இதனைப் பற்றி பல ஆண்டுகளாக விமர்சித்து வந்துள்ளேன், மற்றவர்களும் விமர்சனம் வைத்துள்ளனர்.
இந்த முறையை மாற்ற விருப்பம் இல்லாமல் உள்ளது. டக்வர்த் லூயிஸ் முறை டி20 போட்டிகளுக்கானதல்ல. இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும், இது முட்டாள்தனமானது” என்றார்.