கொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குஜராத் அணியில் பிரதீப் சங்வானுக்கு பதிலாக பிரவின் தாம்பே களம் இறங்கினார்.
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ்ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா, கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள். கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. கம்பீர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மனிஷ்பாண்டே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ராபின் உத்தப்பா 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
5-வது விக்கெட்டுக்கு யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசனுடன் இணைந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் 5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 134 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ஒவைஸ்ஷா-மேத்யூஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 130 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. ஷகிப் அல்-ஹசன் 49 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 66 ரன்னும், யூசுப் பதான் 41 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். குஜராத் அணியில் பிரவீன்குமார் 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி, வெய்ன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. குஜராத் அணியில் வெய்ன் சுமித் 27 ரன்னிலும், பிரன்டன் மெக்கல்லம் 29 ரன்னிலும், கேப்டன் சுரேஷ் ரெய்னா 14 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 51 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ரவீந்திர ஜடேஜா 9 ரன்னுடனும், வெய்ன் பிராவோ ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
கொல்கத்தா அணி தரப்பில் ரஸ்செல், ஷகிப் அல்-ஹசன், பியுஷ் சாவ்லா, பிராட் ஹாக் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். 11-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி 7-வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஆட்டநாயகனாக குஜராத் அணியின் பிரவீண்குமார் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ரெய்னா கூறியதாவது:-
கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எப்போதும் முக்கியமானது. அவர்கள் ஒரு சிறந்த அணி. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வெற்றி அடைய எங்களுக்கு உதவியது. பந்துவீச்சில் வீரர்கள் பலர் இருந்தால் சில சமயம் யாரை வீச வைப்பது என்று குழப்பம் ஏற்படும். யூசுப்பதான் பேட்டிங் செய்தபோது தாம்பே, ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தேன். அவர்கள் மிகவும் அனுபவசாலிகள். பிரவீண்குமார், குல்கர்னி 15-வது ஓவருக்கு பிறகு சிறப்பாக வீசுவார்கள். பிராவோவும் சிறந்த பவுலர். ஆரோன் பிஞ்ச் மிடில் வரிசையில் களம் இறங்குவது எனக்கு, ஜடேஜா மற்ற வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கொல்கத்தா கேப்டன் காம்பீர் கூறுகையில்,
யூசுப்பதான், சகீப்–அல்– ஹசன் ஜோடி பேட்டிங் நன்றாக இருந்தது. தொடக்கத்தில் விக்கெட் வீழ்ந்ததால் சிறப்பாக அமையவில்லை. நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆரம்பித்தோம். ஆனால் அதை மேக்குல்லம் –வெய்ன் சுமித் சமாளித்து ரன் எடுத்துவிட்டனர் என்றார்.