லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 50 ஓவர் கொண்ட காட்சி கிரிக்கெட் போட்டி நேற்றிரவு லார்ட்சில் இடம்பெற்றது.
சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) அணிக்கும், ஷேன் வார்னே தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையேயே குறித்த போட்டி இடம்பெற்றிருந்தது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய உலக லெவன் அணியில் ஷேவாக் 24 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார்.
கில்கிறிஸ்ட் (29 ரன்), தமிம் இக்பால் (1 ரன்), கெவின் பீட்டர்சன் (10 ரன்), அப்ரிடி (0) ஆகியோர் 68 ரன்னுக்குள் வெளியேறினாலும், யுவராஜ்சிங் அணியை தூக்கி நிறுத்தினார்.
அதிரடி காட்டிய அவர் காலிங்வுட் (40 ரன்), பீட்டர்சிடில் (33 ரன்) உதவியுடன் சதத்தினை அடித்து விளாசினார்.
இறுதியில் டெண்டுல்கரின் பந்து வீச்சில் வெளியேறிய யுவராஜ்சிங் 132 ரன்களில் (134 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் உலக லெவன் அணி 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்தது.
பின்னர் ஆடிய எம்.சி.சி. அணிக்கு டெண்டுல்கரும் (44 ரன், 45 பந்து, 7 பவுண்டரி), ஆரோன் பிஞ்சும் முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் (17 ஓவர்) திரட்டி வலுவான தொடக்கம் தந்தனர்.
டெண்டுல்கர் முரளிதரனின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த பிரையன் லாரா (23 ரன்), ராகுல் டிராவிட் (0) ஏமாற்றினாலும், வாணவேடிக்கை நிகழ்த்திய பிஞ்ச் நிலைத்து நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
எம்.சி.சி. அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 296 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆரோன் பிஞ்ச் 181 ரன்களுடனும் (145 பந்து, 23 பவுண்டரி, 6 சிக்சர்), சந்தர்பால் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.