இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் பலத்த அடி விழுந்தது. லோர்ட்ஸ் டெஸ்டில் வரலாற்று வெற்றியை பெற்ற இந்திய அணி அதன் பிறகு தொடர்ந்து மூன்று டெஸ்டுகளில் படுகேவலமாக தோற்று 1-3 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்து கடும் விமர்சனத்திற்குள்ளானது.
அடுத்து இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடைபெறுகிறது.
டெஸ்டில் வீழ்ச்சியால் ஏற்பட்ட மோசமான சுவடை மறைப்பதற்கு, ஒரு நாள் தொடரில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் உலக கிண்ண போட்டி நடக்க இருப்பதால் அதற்கு தயாராவதற்கும் இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பயிற்சி கிரிக்கெட்டில் கிடைத்த வெற்றி இந்திய அணிக்கு சற்று நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. என்றாலும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் அளிக்கும் தொடக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். டெஸ்டில் சொதப்பிய விராட் கோலி, ஒரு நாள் போட்டியிலாவது அணியை தூக்கி நிறுத்துவாரா? என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் துல்லியமாக வீசி மிரட்ட வேண்டும்.
கடந்த ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. இது மனதளவில் இந்தியாவுக்கு ஊக்கம் அளிப்பதாகும். இத்தகைய நேர்மறையான எண்ணத்துடன் விளையாடி இங்கிலாந்தை இந்திய அணி போட்டுத்தாக்குமா? இங்கிலாந்து மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 24 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ருசிக்குமா? என்பதே அனைவரின் பேராவலாகும்.
டெஸ்ட் தொடரில் இந்திய அணியை துவம்சம் செய்த வேகத்துடன் இங்கிலாந்து அணி வரிந்து கட்டும். உள்ளூர் சூழல் அந்த அணிக்கு நிச்சயம் கூடுதல் பலம் என்பதில் சந்தேகமில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி காட்டிய அலெக்ஸ் ஹாலஸ் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆகிறார். அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க இருப்பதை கேப்டன் அலஸ்டயர் குக் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் குக் கூறுகையில், ‘டெஸ்ட் போட்டி முடிந்து இப்போது ஒரு நாள் தொடர் தொடங்குகிறது. இந்த மாற்றம் இந்தியாவுக்கு உதவிகரமாக இருக்கும். ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக சாம்பியன் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே எந்த மாதிரி ஆட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அனேகமாக இது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாக இருக்கும். ஆனால் நாங்கள் நன்றாக ஆடினால், சொந்த மண்ணில் எங்களை தோற்கடிப்பது கடினம்’ என்றார்.
இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று 2 ஆண்டுகள் ஆகி விட்டது. 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்ற பிறகு தென்ஆப்பிரிக்காவுடன் டிராவும் (2-2), நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கையுடன் தோல்வியையும் சந்தித்து இருக்கிறது. இந்த நீண்ட கால சோகத்துக்கு விடைகொடுக்கும் முனைப்புடன் இங்கிலாந்து வியூகங்களை வகுத்து வருகிறது. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.