ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆந்திராவைச் சேர்ந்த அம்பதி ராயுடு, இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனக்தத் ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர்.
ஜிம்பாப்வே அணிக்கு சிபண்டா, சிக்கந்தர் ஜோடி நிதான தொடக்கம் அளித்தது. வினய் குமார், முகமது சமியின் வேகத்தை இந்த ஜோடி எளிதாக சமாளித்தது. நீண்ட நேரத்திற்கு பின் சிபண்டா 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய சிக்கந்தர் அரைசதம் கடந்து 83 ஓட்டங்களும், சிகும்பரா 43 ஓட்டங்களும் எடுக்க ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணிக்கு தவான், ரோகித் ஜோடி தொடக்கம் கொடுத்தது. ஜார்விஸ் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த தவான் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த அணித்தலைவர் கோஹ்லி பொறுப்புணர்ந்து செயல்பட்டார். இவர் சிகும்பரா பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். பின் ராயுடுவுடன் இணைந்து ஒன்றிரண்டு ஓட்டங்களாக சேர்த்தார்.
மசகாட்சா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அம்பதி ராயுடு, ஒரு நாள் அரங்கில் தனது முதல் அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஜார்விஸ், சத்தாரா ஓவரில் கோஹ்லி தலா ஒரு பவுண்டரி அடித்தார்.
தொடர்ந்து அசத்திய கோஹ்லி, முடாம்போட்சி ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசி ஒரு நாள் அரங்கில் தனது 15வது சதத்தை கடந்து 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
முடிவில், இந்திய அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.