சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் அட்டவணை வெளியானது. முதல் லீக் போட்டியில், மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் வரும் செப்., 17 முதல் அக்., 6 வரை இந்தியாவில் நடக்கவுள்ளது. மொத்தம் ரூ. 36 கோடி பரிசுத் தொகை கொண்ட இத்தொடர் 29 போட்டிகளை கொண்டது.
இதில் உள்ளூர் “டுவென்டி-20′ தொடரில் சாதித்த அணிகள் பங்கேற்கும். இம்முறை, 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கும். “ஏ’ பிரிவில் ராஜஸ்தான், மும்பை, ஹைவெல்டு லயன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் “பி’ பிரிவில் சென்னை, டைட்டன்ஸ், பிரிஸ்பேன் ஹீட், டிரினிடாட் அண்டு டுபாகோ என, மொத்தம் 8 அணிகள் உள்ளன.
செப்., 17 முதல் 20 வரை நடக்கும் தகுதிச்சுற்றில் ஐதராபாத், இலங்கை, நியூசிலாந்து (ஒடாகோ வோல்ட்ஸ்) மற்றும் பாகிஸ்தான் (பைசலாபாத் வால்வ்ஸ்) என, நான்கு அணிகள் விளையாடும்.இதில், முதல் இரு இடங்களை பெறும் அணிகள், “ஏ’, “பி’ பிரிவில் இடம் பெறும். செப்., 21ல், ஜெய்ப்பூரில் நடக்கும் முதல் போட்டியில், 6வது பிரிமியர் தொடரில் சாம்பியனான ரோகித் சர்மாவின் மும்பை அணி, டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
செப்., 22ல் ராஞ்சியில் சென்னை அணி தனது முதல் போட்டியில், தென் ஆப்ரிக்காவின் டைட்டன் அணியை சந்திக்கவுள்ளது. தவிர, ஆமதாபாத், ஐதராபாத்திலும் போட்டிகள் நடக்கும்.அரையிறுதி போட்டிகள் ஜெய்ப்பூர் (அக்.,4), டில்லியில் (அக்., 5) நடக்கவுள்ளன. அக்., 6ம் தேதி, டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில், பைனல் நடக்கும்.