இலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவதில்லை என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டிக்குரிய கிரிக்கெட் அணிகளை பணம்கொடுத்து வாங்க முதலீட்டாளர்கள் முன்வரவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் வர்த்தக அணுசரணையாளராக விளங்கும் சொமர்செட் எண்டர்டெயிண்மெண்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தாருக்கும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் செவ்வாயன்று மாலை நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதனன்று மாலை நடந்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் பங்குபெறக்கூடிய அணிகளை வாங்குவதற்குரிய கட்டணத்தை நிறுவனங்கள் காலக்கெடுவுக்குள் செலுத்தத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம்கூட இல்லை என்ற நிலையிலும், நாற்பது லட்சம் டாலர்கள் அளவுக்கு வரக்கூடிய வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்துக்குரிய வங்கி உத்திரவாதமோ, கட்டணத்தொகையோ அணிகளை வாங்கவிருந்த நிறுவனங்களால் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
மொத்தம் நாற்பது லட்சம் டாலர்கள் அளவுக்கு வரக்கூடிய ஒரு தொகை இது.
வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி முதலில் ஜூலை 14ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. கட்டணங்கள் வரவில்லை என்பதால், ஜூலை 20ஆம் தேதிக்கு அந்நிகழ்ச்சி ஒத்திப்போடப்பட்டது. ஆனால் கட்டணம் செலுத்தப்படுவதற்குரிய இரண்டாவது காலக்கெடு 16ஆம் தேதியோடு முடிவடைந்தும், அனைத்து நிறுவனங்களும் கட்டணம் செலுத்த முன்வராததால், இந்த வருடம் போட்டியை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தி ஒரு அணியை வாங்கும் நிறுவனமானது 7 வருடங்களுக்கு அதன் உரிமையாளராக இருக்கலாம் என்று விதிகள் இருந்தன.
ஆனால் 7 ஆண்டுகளில் செய்த முதலீட்டுக்குரிய வருமானம் கிடைக்காது என முதலீட்டாளர்கள் முறையிட்டதை அடுத்து உரிமக் காலம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டிருந்தது.
அப்படியிருந்தும் கூட மூன்று அணிகளுக்குரிய நிறுவனங்களைத் தவிர மற்ற அணிகளுக்குரிய நிறுவனங்கள் உரிமையாளர் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்த முன்வரவில்லை.
ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2011ஆம் ஆண்டே துவங்கப்படவிருந்தன. ஆனால் அந்த ஆண்டு போட்டிகள் நடப்பது ரத்துசெய்யப்பட்டிருந்தது.
2012ஆம் ஆண்டு போட்டிகள் நடந்து அதன் மூலம் இலங்கை கிரிக்கெட் அமைப்புக்கு 29 கோடி இலங்கை ரூபாய் வருவாய் கிடைத்தததாக ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் இயக்குநர் அஜித் ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு போட்டிகள் மறுபடியும் ரத்து ஆகியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் சபையின் வருவாய் குறைய அதற்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்படலாமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மிகக் குறைவான சர்வதேச போட்டிகளே இந்த ஆண்டு இலங்கையில் நடக்கின்ற ஒரு சூழ்நிலையில், ஏற்கனவே இந்த வருடம் இலங்கை கிரிக்கெட்டுக்கு வருமானம் குறைவான ஒரு வருடம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.