ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில், சிம்பாப்வே கடைசி வரை போராடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கிண்ண போட்டிகளில் இன்று இடம்பெற்ற குழு பி பிரிவிற்கான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியமும், சிம்பாப்வேயும் மோதின. நியூசிலாந்தின் சக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணித் தலைவர் எல்டன் சிக்கும்புரா களத்தடுப்பைத் தெரிவுசெய்தார்.
இதன் பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்பாக சைமான் அன்வர் 67 ஓட்டங்களையும் குராம் கான் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இறுதியாக 50 ஓவர்களின் நிறைவில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக சட்டாரா 3 விக்கெட்டுக்களையும் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
286 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சிம்பாப்வே அணி இறுதி வரை போராடி 12 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப்பெற்று வெற்றியைத் தனதாக்கியது.
துடுப்பாட்டத்தில் வில்லியம்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களையும், டெய்லர் மற்றும் ரசா ஆகியோர் முறையே 47 மற்றும் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் ஐக்கிய அரபு இராச்சியம் சார்பாக தக்பீர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் பந்துவீச்சு ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுடன் காணப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குறிப்பாக 35 ஆவது ஓவருக்கு பின்னர் வில்லியம்ஸின் அதிரடி ஆட்டத்தினால் இவர்களின் வெற்றிக்கனவு பறிபோனது.