ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 474 வீரர்களை அவுட் செய்து சங்கக்கார உலக சாதனை நிகழ்த்தினார் இதன் மூலம் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்தார்.
இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற 7-வது ஒருநாள் போட்டியில் சங்கக்காரா 2 கேட்ச்களை பிடித்ததன் மூலம் 474 விக்கெட்டுகள் விழக் காரணமானவர் என்ற வகையில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் (472) சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
அதோடு மட்டுமல்லாமல் தனது அற்புதமான பேட்டிங் ஃபார்மை தொடர்ந்த சங்கக்காரா இன்று 105 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 113 ரன்களை எடுத்து தனது 21-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். சனத் ஜெயசூரியா 28 ஒருநாள் சதங்களுடன் முன்னிலை வகிக்க, 20 சதங்கள் எடுத்த திலகரத்ன தில்ஷனின் சாதனையை சங்கக்காரா கடந்தார்.
இதன் மூலம் சதங்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (49), ரிக்கி பாண்டிங் (30), ஜெயசூரியா (28), கங்குலி (22) ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார் சங்கக்காரா.
விக்கெட் கீப்பிங்கில் தற்போது சங்கக்காரா 474 முதலிடம், கில்கிறிஸ்ட் 472, மார்க் பவுச்சர் 424, தோனி 314 ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
வெலிங்டனில் நடைபெற்ற இன்றைய ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை, சங்கக்காராவின் சதம் மற்றும் தில்ஷனின் 81 ரன்களால் 50 ஓவர்களில் 287/6 என்ற ஸ்கோரை எட்டியது.
தொடர்ந்து ஆடிய நியூசி. அணி 45.2 ஓவர்களில் 253 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்தது. ஆனாலும் தொடரை 4-2 என்று கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக சங்கக்காரா தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.