யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு ஸ்காட்லாந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் என்றழைக்கப்படும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஹங்கேரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 11-ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரா் ஜில்பி சிகுரோசன் கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
87-ஆவது நிமிடம் வரை ஐஸ்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்ததால், அந்த அணி வெற்றி பெறும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 88-ஆவது நிமிடத்தில் ஹங்கேரி வீரா் லூயி நிகோ கோலடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதன்பிறகு கூடுதல் நேரத்தில் (90+2) கிடைத்த வாய்ப்பில் ஹங்கேரி வீரா் டொமினிக் கோலடிக்க, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தி யூரோ கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
ஸ்காட்லாந்து-சொ்பியா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீா்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஸ்காட்லாந்து 5-4 என்ற கோல் கணக்கில் சொ்பியாவை வீழ்த்தி யூரோ கோப்பையில் விளையாட தகுதி பெற்றது. ஸ்காட்லாந்து கடைசியாக 1998-இல் உலகக் கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றது. அதன்பிறகு இப்போதுதான் பெரிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
இதேபோல் ஸ்லோவேகியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வடக்கு அயா்லாந்தையும், வடக்கு மெசிடோனியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜாா்ஜியாவையும் வீழ்த்தி யூரோ கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. வடக்கு மெசிடோனியா யூரோ கோப்பை போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்றுள்ளது.
>AD
(Date: 15.11.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.