இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.
ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் கௌரவத்துக்காக களத்தில் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் நீயா-நானா? என்று இரு அணி வீரர்களும் எப்போதும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.
குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆஷஸ் தொடரை 33 முறை அவுஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 5 தொடர் சமநிலையில் முடிந்துள்ளது.
கடைசியாக 2017/18 ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா வென்றதில்லை.
தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக உலக சாம்பியன் மகுடத்தை சூடிய இங்கிலாந்து அணி சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் 85 ஓட்டங்களில் சுருண்டு அதிர்ச்சிக்குள்ளானது. எப்படியோ சுதாரித்துக் கொண்டு சரிவில் இருந்து மீண்டு இங்கிலாந்து வெற்றிக்கனியை பறித்தது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஜாசன் ராய், ஜோ ரூட் (தலைவர்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்.
அவுஸ்திரேலியா: வார்னர், பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட் அல்லது மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், டிம் பெய்ன் (தலைவர்), நாதன் லயன், கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில் அல்லது ஹேசில்வுட்.
>AD
(Date: 01.08.2019)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.