இலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா சார்பாக டேவிட் வோனர் மற்றும் அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 16.4 ஓவர்களில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் தனது 14 ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தை எட்டினார்.

132 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்கள், 15 பௌண்டரிகளுடன் 153 ஓட்டங்களை குவித்தார்.

ஏரோன் பிஞ்ச் – ஸ்டீவன் ஸ்மித் ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்காக 20 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

ஸ்டீவன் ஸ்மித் 59 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பௌண்டரிகளுடன் 73 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த கிளன் மெக்ஸ்வெல் 25 பந்துகளில் ஒரு சிக்ஸர், ​5 பௌண்டரிகளுடன் 46 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் இசுரு உதான, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

கடின இலக்கான 335 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேரா – திமுத் கருணாரத்ன ஜோடி சிறந்த ஆரம்பத்தை இட்டது.

இவர்கள் முதல் 10 ஓவர்களில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இது இவ்வருட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் முதல் பவர் பிளேயில் ஓர் அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

15.3 ஓவர்களில் 115 ஓட்டங்களைப் பகிரப்பட்ட நிலையில் முதல் விக்கெட்டாக குசல் ஜனித் பெரேரா 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

36 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளை விளாசினார்.

லஹிரு திரிமான்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 23.5 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது நான்காவது சர்வதேச ஒருநாள் அரைச்சதத்தை கடந்து 97 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும், மத்திய வரிசை வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டம் இலங்கை அணியை மீண்டும் தோல்வியடைய செய்தது.

ஏஞ்சலோ மெத்யூஸ், மிலிந்த சிறிவர்தன, திசர பெரேரா,இசுரு உதான ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடனும்
குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களையும் கேன் ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் போட்டியின் பின்னர் நடாத்தப்படும் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாட்டில் எந்தவொரு இலங்கை வீரரோ அல்லது பயிற்றுவிப்பாளரோ கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>NF

(Date: 16.06.2019)

You may also like ...

World Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி

World Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட

Also Viewed !

புதிய தொகுப்புகள்