வெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.

176 ஓட்டங்கள் இலக்குடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடியது.

தொடக்க வீரர் வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 8 வது வெற்றியாகும். இதன்மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளேஆப்’ சுற்றை உறுதி செய்து மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. மேலும் இந்த வெற்றி மூலம் ஐதராபாத்திடம் அதன் சொந்த மண்ணில் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 5 வது வெற்றியை ருசித்தது.

வெற்றி குறித்து சூப்பர் கிங்ஸ் தலைவர் டோனி கூறியதாவது: தனி நபர்களால் சில ஆட்டங்களில் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது. பல போட்டிகளில் அணியாக வெற்றி பெறுகிறோம். எங்கள் அணியின் மேட்ச் வின்னர் வாட்சன். சில ஆட்டங்களில் அவர் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவருக்கு ஆதரவு அளிப்பது அவசியமானது. கடந்த ஆண்டு அவர் பல்வேறு ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நிலையாக விளையாடி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைவது குறித்து கேட்கப்படுகிறது. இந்த வெற்றியின் மந்திரத்தை வெளியில் சொல்லக்கூடாது. ஏனென்றால் ஏலத்தில் என்னை வாங்க மாட்டார்கள். அது வியாபார ரகசியம்.

சென்னை அணியின் வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு, சென்னை அணியின் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதைத் தவிர நான் ஓய்வு பெறும் வரை வேறு எதையும் சொல்ல மாட்டேன்.

எனது முதுகுவலி மோசமாக இல்லை. ஆனால் உலக கிண்ணம் நெருங்குவதால் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். அச்சப்படும்படி எதுவும் இல்லை. உலக கிண்ணம் தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத் அணி 5 வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக தலைவர் புவனேஷ்வர் குமார் கூறும்போது, “175 ஓட்டங்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் பனி துளியால் ஆடுகளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேற இயலும்” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 12 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 26 ஆம் திகதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. ஐதராபாத் அணி 11 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை 27 ஆம் திகதி சந்திக்கிறது.

(Date: 24.04.2019)

You may also like ...

IPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய

IPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI!

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ

புதிய தொகுப்புகள்