IPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB!

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 14 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரோயல் சலேன்ஞ்சர்ஸ் பெங்களூர் எதிர்கொண்டது.

ரோயல் சலேன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மூன்று மாற்றமாக ஷிவம் துபே, ராய் பர்மான், கிரான்ட்ஹோம் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்‌ஷ்தீப் நாத், நவ்தீப் சைனி, மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் பாகிஸ்தான் தொடரை முடித்துகொண்டு பெங்களூரு அணியுடன் இணைந்த பிறகு இந்த சீசனில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும்.

ராஜஸ்தான் அணியில் காயமடைந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன் இடம் பிடித்தனர். தொடர்ந்து 4 ஆவது முறையாக நாணயசுழற்சியை வென்ற ராஜஸ்தான் அணித்தலைவர் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய பெங்களூரு அணிக்கு தலைவர் விராட் கோலியும், விக்கெட் கீப்பர் பார்த்தீப் பட்டேலும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வந்ததும் பெங்களூரு அணி தகிடுதத்தம் போட்டது.

முதல் விக்கெட்டுக்கு 49 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி (23 ஓட்டங்கள், 25 பந்து, 3 பவுண்டரி) கோபால் வீசிய கூக்ளி வகை பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் (13 ஓட்டங்கள்), ஹெட்மயர் (1 ஓட்டங்கள்) ஆகியோரும் கோபாலின் சுழல் வலையில் சிக்கினர்.

‘இளம் புயல்’ ஹெட்மயர் இதுவரை ஆடிய 4 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தை தாண்டாத பரிதாபம் தொடருகிறது.

இதன் பின்னர் பார்த்தீவ் பட்டேலும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் ஸ்கோர் வேகம் மந்தமானது. பார்த்தீவ் பட்டேல் தனது பங்குக்கு 67 ஓட்டங்கள் (41 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.

அவருக்கு பிறகு வந்த மொயீன் அலி, அணி 150 ஓட்டங்களை கடக்க உதவினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் ஸ்டோனிஸ்-மொயீன் அலி இணைந்து 17 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர்.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்டோனிஸ் 31 ஓட்டங்களுடனும் (28 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), மொயீன் அலி 18 ஓட்டங்களுடனும் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ஓட்டங்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 159 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தலைவர் ரஹானேவும், ஜோஸ் பட்லரும் களம் புகுந்தனர். ரஹானே 1 ஓட்டத்தில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி கோட்டை விட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஹானே, அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைய வித்திட்டார். அணியின் ஸ்கோர் 60 ஓட்டங்களாக (7.4 ஓவர்) உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. ரஹானே 22 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

மறுமுனையில் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களில் (43 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து இறங்கிய ஸ்டீவன் சுமித்தும் (38 ஓட்டங்கள்) கணிசமான பங்களிப்பை அளித்து நெருக்கடியை தணித்தார்.

ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திரிபாதி 34 ஓட்டங்களுடனும் (23 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 1 ஓட்டங்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

4 ஆவது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு இது முதல் வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத பெங்களூரு அணிக்கு இது 4 ஆவது தோல்வியாகும்.

(Date: 03.04.2019)

You may also like ...

World cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப

World cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி

புதிய தொகுப்புகள்