IPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 3 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் இது 700-வது ஆட்டமாகும்.

நாணய சுழற்சியை வென்ற மும்பை தலைவர் ரோகித் சர்மா முதலில் டெல்லியை துடுப்பெடுத்தாட்டம் செய்ய பணித்தார். இதையடுத்து துடுப்பெடுத்தாட்டத்தை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பிரித்வி ஷா (7 ஓட்டங்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (16 ஓட்டங்கள்) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் காலின் இங்ராமும், ஷிகர் தவானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இங்ராம் 47 ஓட்டங்களும், ஷிகர் தவான் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.

இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர் மழை பொழிந்த அவர் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். உலகத்தரம் வாய்ந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ரிஷாப் பான்டுவின் வாணவேடிக்கையால் டெல்லி அணி 200 ஓட்டங்களை எளிதில் கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் குவித்தது. மும்பைக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 21 வயதான ரிஷாப் பான்ட் 78 ஓட்டங்களுடன் (27 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. தலைவர் ரோகித் சர்மா 14 ஓட்டங்களிலும், சூர்யகுமார் யாதவ் 2 ஓட்டங்களிலும், குயின்டான் டி காக் 27 ஓட்டங்களிலும், பொல்லார்ட் 21 ஓட்டங்களிலும், ஹர்திக் பாண்ட்யா ஓட்டங்கள் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர். இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் அரைசதம் (53 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தது மட்டுமே உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.

மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா துடுப்பெடுத்தாட வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

You may also like ...

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!

வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப

Also Viewed !

புதிய தொகுப்புகள்