டோனியை கட்டி அணைத்த மாணவரிடம் பொலிஸார் விசாரணை!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 23 ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இதையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து நேற்று முந்தினம் காட்சி போட்டியில் விளையாடினர்.

இதை பார்ப்பதற்கு சி.டி.இ. ஆகிய கேலரிகளில் ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். 3 கேலரிகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் புகுந்தார். அவர் டோனியை நோக்கி கட்டி அணைக்க ஓடி வந்தார்.

இதனை கவனித்த டோனி அவரிடம் சிக்காமல் ஓட்டம் காண்பித்தார். ஆனாலும் விடாமல் துரத்திய வாலிபர் டோனியை நெருங்கினார். அப்போது அருகில் நின்ற பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜியின் பின்னால் டோனி மறைந்து நின்றார்.

இந்த ஓட்டம் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் டோனியே அந்த வாலிபரிடம் வந்து கைகுலுக்கி கட்டி அணைத்தார். இதன் பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறினார்.

இதை அடுத்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த அந்த வாலிபரை திருவல்லிக்கேணி பொலிஸார் பிடித்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர் மதுரை மாகாளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவரான அரவிந்த்குமார் என்பது தெரிந்தது. எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் அவர் கிரிக்கெட் வீரர்களை பார்ப்பதற்காகவே மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை வந்துள்ளார்.

டோனியின் தீவிர ரசிகரான அரவிந்த்குமார் மைதானக்குள் டோனியை பார்த்ததும் மகிழ்ச்சியில் பாதுகாப்பை மீறி சென்றுவிட்டதாக கூறி உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான டோனிக்கு சென்னையில் ரசிகர்கள் அதிகம்.

சமீபத்தில் நாக்பூரில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போதும் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் வந்து டோனியை கட்டி அணைத்தார். இந்த வீடியோ வைரலானது. தற்போது சென்னையிலும் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

(Date: 19.03.2019)

புதிய தொகுப்புகள்