பெர்டுசிஸ் / ஊஃபிங் காஃப் (கக்குவான் இருமல்)

இது ஒரு பாக்டீரியா நோய்தொற்று. இது முதலில் மூக்கு மற்றும் தொண்டையை பாதிக்கிறது. இந்நோய் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் சுவாச உறுப்புகளை பாதிக்கிறது. நோயாளிகள் சுவாசிக்கும் போது ஏற்படும் சத்தத்தை வைத்து, இதற்கு “ஊஃபிங் காஃப்” என பெயர் வந்தது.

காரணங்கள்:
இந்நோயினை உண்டாக்கும் பாக்டீரியாவின் பெயர் “போர்டொடல்லா பெர்டுசிஸ்” என்பதாகும். இந்நோய் கண்ட நபர்கள் இருமும் போதோ அல்லது தும்மும் போதோ, சுவாச உறுப்புகளிலிருந்து சிதறும் சளி துளிகள்,நீர்துளிகள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது. மூக்கில் ஒழுகும் நீரானது மற்றவர்கள் மேல் படும் போதும் இவ்வகை பாக்டீரியா பிறருக்கும் பரவுகிறது.

அறிகுறிகள்:

> பொதுவாக பாக்டீரியா நோய்தொற்று ஏற்பட்ட 7 லிருந்து 17 நாட்கள் கழித்து இந்நோயின் அறிகுறிகள் தோன்றும்.
> இந்நோய் தொற்று கண்ட நோயாளிகள் பெரும்பாலும் 2 வயதிற்கு உட்பட்டவராகவே இருப்பர்.
> அறிகுறிகள் பொதுவாக 6 வாரங்கள் வரை இருக்கும். அவை மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நிலை-1
தும்மல், மூக்கில் நீர்வடிதல், பசியின்மை, சோர்வு மற்றும் இரவு நேரங்களில் இருமுதல் போன்றவை நிலை-1 ல் ஏற்படும் அறிகுறிகள ஆகும்.

நிலை-2
அடிக்கடி தொடர்ந்து இருமல் ஏற்படுதல் மற்றும் நோய்வாய்பட்ட நபர் மூச்சிழுக்கும் போது “ஊஃப்” என்ற சத்தம் ஏற்படுதல் போன்றவை நிலை‍-2 ல் ஏற்படும் அறிகுறிகள ஆகும்.

நிலை-3
இது நோயிலிருந்து விடுபடும் காலம். இதில் இருமல் ஏற்படும் எண்ணிக்கை/முறை மற்றும் கடினத்தன்மை நிலை-2 ல் உள்ளது போலல்லாமல், குறைந்து காணப்படும். இந்நிலை பொதுவாக நோய்வாய்பட்ட 4 வாரங்களுக்கு பின் ஆரம்பமாகும்.

இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் தொடர்ந்து இருந்தால் சிறுவர்களுக்கு ஊஃபிங் காஃப் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

தடுத்துக்காத்தல்:

> எல்லா குழந்தைகளுக்கும் இந்நோயினை எதிர்க்கும் தடுப்பூசி போட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியானது, டிடிபி (டிப்த்திரியா (தொண்டை அடைப்பான்), டெடானஸ் (இடுப்பு வலிப்பு), மற்றும் பெர்டுசிஸ் (கக்குவான் இருமல்) எனப்படும் கூட்டு மருந்தாக அளிக்கப்படும்.

> நோய்தொற்று முன்னதாக ஏற்பட்டதாலோ அல்லது தடுப்பூசி எடுத்திருப்பதாலோ வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மை இருக்கும் என கூறமுடியாது. நோய் பரவலாக காணப்பட்டால் மட்டுமே, 6 வயதிற்கு மேல் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) பரிந்துரைக்கப்படுகிறது.