காலரா

காலரா என்பது என்ன?

‘விப்ரியோ காலரா’ என்ற நுண்கிருமிகள் குடல் பகுதியைத் தொற்றி பாதிப்பை ஏற்படுத்தும்.அதனால் வரக்கூடிய கடுமையான வயிற்றுப்போக்கை தான் காலரா என்கிறோம்.பொதுவாக அறிகுறிகள் இல்லாமலோ அல்லது சில அறிகுறிகளுடனோ வந்து சாதரண பாதிப்பை உண்டாக்கும். ஆனால் சில சமயங்களில் கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும்.

காலரா நோயின் அறிகுறிகள் என்ன?

ஏறத்தாழ பாதிக்கப்பட்ட 20 நபர்களில் ஒருவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகின்றது. கடுமையான
காலரா நோய்க்கான அறிகுறிகள்:

> அளவு கடந்த தொடர்ந்து வயிற்றுப்போக்கு (சோற்றுக் கஞ்சி போல் இருக்கும்)
> வாந்தி
> கால்களில் தசைப்பிடிப்பு

பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள நீரும், மற்ற சத்துப்பொருள்களும் அதிக அளவு வெளியேறுவதால், “நீர்க் குறைவு” அறிகுறிகள் தோன்றும். இதனால் உடல் வலுவிழந்து நிலைகுலைந்து விடும். சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், சில மணிநேரங்களில் மரணம் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது.

ஒரு மனிதனுக்கு காலரா நோய் எப்படி வருகிறது?

ஒருவர் ‘விப்ரியோ’ நோய்க் கிருமிகள் தொற்றிய நீர் அல்லது உணவுப்பண்டங்களை உட்கொள்ளுவதால் காலரா நோய்க்கு ஆளாகிறார். பொதுவாக ஒருவருக்கு இந்நோய் உண்டானால், அவரது மலத்தில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான ‘விப்ரியோ’ கிருமிகள் பிறருக்கு இந்நோய் பரவ காரணமாகின்றன. பராமரிக்கப்படாத சாக்கடைகள், சுத்தீகரிக்கப்படாத குடிநீர் மூலம் இந்நோய் அதி வேகமாக பிறருக்கு பரவும்.

உப்புகலந்த ஆறு மற்றும் கடல்நீர் போன்றவற்றில் ‘விப்ரியோ’ பாக்டீரியாக் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. பன்றியிறைச்சி, நண்டு போன்றவற்றை நன்கு சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது காலரா வருவதற்கு வழிவகுக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது நேரடியாகத் தொற்றக்கூடிய நோய் அல்ல. எனவே காலரா நோய் பாதிக்கப்பட்டவரிடம் பேசுவதாலோ அல்லது பழகுவதாலோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மருத்துவ ஆலோசனை: வயிற்றுப்போக்கினால் ஏற்பட்ட நீர்க்குறைவு & தாதுப்பொருட்கள் குறைபாட்டை உடனடியாக சரி செய்வதன் மூலம் காலரா நோயை எளிமையாகவும் வெற்றிகரமாகவும் குணப்படுத்தலாம். கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் காலரா நோயுற்றவர் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் உடனடியாக, அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்தல் அவசியம்.


காலரா வராமல் இருக்க முன்னெச்சரிக்கை & தடுப்பு நடவடிக்கைகள்:

> கழிவறைகளை நோய்க்கிருமி தொற்றாதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

> மன ரீதியிலான சோர்வுக்கு ஆளாகக் கூடாது.

> கூட்டமான அல்லது நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்.

> தண்ணீரை நன்கு கா‌ய்ச்சிய பிறகு சூடு அடங்கும் வரை காத்திருக்கவும். பிறகு அதை ஒரு பாட்டிலில் பாதி அளவு நிரப்பவும்.பாட்டிலை இறுக்கமாக மூடி சில நிமிடங்களுக்கு நன்றாக குலுக்கி பின்னரே குடிக்கவும். அதேசமயம் பயன்படுத்தும் பாட்டில்கள், டம்ளர், பாத்திரங்கள் ஆகியவற்றை சுடுநீரில் நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்தல் மிகவும் முக்கியம்.

> நன்கு கா‌ய்ச்சாமல்/கொதிக்க வைக்காமல் எதையும் குடிக்கக் கூடாது.

> அனைத்து உணவுப்பொருட்களையும் நன்கு வேகவைத்து சமைக்கவும். சுத்தமான கிருமி நீக்கப்பட்ட பாத்திரத்தில் பழங்களை வைத்து, சுடு நீரில் கழுவி சாப்பிடவும். பழத்தின் தோலை நீக்கி சாப்பிடுதல் நல்லது. பழத்தை ஆவியில் சிறிது நேரம் வைத்து பிறகு சாப்பிடுதல் மிகவும் சிறந்தது.

> பிரட், பண் போன்றவற்றை அப்படியே சாப்பிடாமல் தோசைக்கல்லில் இட்டு டோஸ்ட் செய்து சாப்பிடவும்.

> சூடான உணவுகளையே உண்ண வேண்டும்.

> பாட்டில்கள், டம்ளர், கரண்டிகள், பாத்திரங்கள் உட்பட பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் பயன்படுத்தும் முன் சுடு தண்ணீரால் கழுவவும். முடிந்தால் அடுப்பில் பாத்திரங்களை சில நிமிடங்கள் வைத்து பிறகு உபயோகிக்கவும்.

> சுடுதண்ணீரில் மட்டும் கைகளைக் கழுவுதல் வேண்டும்.

> சுடு தண்ணீரில் கார்பாலிக் அமிலம் சிறிது கலந்து முகம் மற்றும் கைகளை அவ்வப்போதும், சாப்பிடும் முன்னும் கழுவவும்.

> துவட்டுவதற்கு சுத்தமான துண்டுகளை மட்டும் பயன்படுத்தவும்.

> துவைப்பதற்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தவும்.

> படுக்கை அறை கழிவறையில் பயன்படுத்தப்படும் துணிகளை சுடுதண்ணீரில் நனைத்து துவைத்து பிறகு உலர வைத்து பயன்படுத்தல் வேண்டும்.

> பயன்படுத்தும் அனைத்து துணிகளையும் சுடுதண்ணீரில் அமுக்கி, துவைத்து பிறகு உலர வைக்கவும். அதன் பின்னர் பயன்படுத்த வேண்டும். துணிகளைப் பயன்படுத்திய பிறகு ஒவ்வொரு முறையும் சுடு நீரில் நனைத்து துவைத்துத்தான் பயன்படுத்த வேண்டும்.

> வீட்டில் இருக்கும் ஒருவருக்கு காலரா வந்துவிட்டால், உடனே அவரைத் தனியறையில் வைத்து கண்காணித்தல் முக்கியம்.

> காலராவால் இறந்த நோயாளிகளின் உடல்கள், அவர்கள் பயன்படுத்திய துணிகளை மண்ணில் புதைக்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை. வாய் மற்றும் மூக்குப்பகுதியை மாஸ்க் (முகம் மூடுவதற்கு பயன்படும் உறை) வைத்து மூடிக்கொண்டு செயல்படவேண்டும். மாஸ்கானது அரை இன்ச் தடிமன் அளவிற்கு பஞ்சு வைக்கப்பட்டு உலோகத்தாலும் நார்த்துணிகளைக் கொண்டும் செய்யப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தும் முன்னரும் பின்னரும் ஒவ்வொரு முறையும் 150 டிகிரி வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தி உபயோகிக்க வேண்டும்.அதாவது நெருப்பு அனலில் மாஸ்கை சிறிது நெரம் காட்டி முழுமையாக வெப்பப்படுத்தி உபயோகிக்கலாம்.

> காலரா நோயாளி இருக்கும் அறைக்குள் யாரேனும் நுழைவதற்கு முன், அறையின் கதவுகளை வெகு நேரம் திறக்காமல் அடைத்து வைக்கவும்.