சோரியாஸிஸ்

சோரியாஸிஸ் என்றால் என்ன?

சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத ஒரு சருமக்கோளாறு. இது, ஒரு குடும்பத்தில் பரம்பரையாக வரக் கூடிய நோய். இவ்வியாதியானது, சிவப்பு நிறமான செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவ்வியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும்.

சோரியாஸிஸ் ஏற்படக் காரணங்கள் யாவை?

குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்காணும் இரண்டு முக்கிய காரணங்களோடு தொடர்புடையது.

• பரம்பரையாக வரக்கூடியது.
• ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை.

செதில் வடிவிலான சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன?

தோலின் வெளிப்புறத்தில் உள்ள அடுக்கில் அதிகமான தோல் செல்கள் ஏற்படுவதினால் செதில்கள் போன்ற சிவப்புநிற தடிப்புகள் தோலின் மீது ஏற்படுகிறது. பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள்  முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபரில் தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது.

சோரியாஸிஸை எப்படி கண்டறிவது?

தோல் சிவப்பதால் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், அரிப்பு, தோல் தடிமனாதல், வெடிப்புகள் ஏற்படுதல், கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல்  போன்றவை சோரியாஸிஸ்-ன் அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.

சோரியாஸிஸை அதிகமாக்கும் அல்லது அதிக கேடான நிலைக்கு கொண்டு செல்லும் காரணிகள் உண்டா?

சில காரணிகள் சோரியாஸிஸ் வாதையை அதிகப்படுத்தும். அவற்றுள் சில; வேதிப்பொருட்களினால், தொற்று நோயினால், சொறிவதினால் ஏற்படும் காயங்கள், சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், புகைபிடித்தல், பீடா சுவைத்தல் மற்றும் மன அழுத்தம்.

சோரியாஸிஸ் (பரவும்) தொற்றும் தன்மை கொண்டதா?

இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.

இந்நோயினை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

• தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும்.
• வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும்.
• மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும்.
• நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும்.
• மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
• நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும்.
• தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும்.
• தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும்.
• உடல் நலக்குறைவு மற்றும் தொற்றும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும்.

உணவு பழக்கம் முக்கியமா?

சோரியாஸிஸ்-னால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.