குழந்தைகளுக்கு நிகழும் நீரிழிவு நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்!

சர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் எனும் ஹார்மோனின் அளவு போதுமானதாக இல்லாததினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்)ன் அளவு குறிப்பிட்ட அளவைவிட மிக அதிகமாக உயருகிறது.

இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். இது கணையத்திலிருந்து சுரக்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சர்க்கரை நோயின் வகைகள்

ஒரு குழந்தைக்கு இன்சுலின் குறைவாக சுரக்கும்போதோ அல்லது முழுமையாக சுரக்காத நிலை ஏற்படும்போதோ, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு உயர்கிறது. இதனை டைப்-1 டையபடீஸ் மெல்லிடஸ் என்பர். மற்றொரு வகை, சுரக்கப்பட்ட இன்சுலின் ஹார்மோன் அளவுகளை உடல் அங்கீகரிக்க முடியாத நிலையால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனை டைப் 2 டையாபிடிஸ் என்பர்.

டைப் 1 டையாபடிஸ் குழந்தை பருவத்தின் எந்த காலகட்டத்திலும் ஏற்படலாம். ஆனால் பொதுவாக 6 முதல் 13 வயதிற்கிடைப்பட்ட காலங்களில் தோன்றுகிறது. டைப் 2 டையாபிடிஸ் முக்கியமாக வாலிப பருவத்தில் தோன்றுகிறது. ஆனால் தற்போது அதிக உடல் எடை உள்ள பிள்ளைகளுக்கும் தோன்றுகிறது.

எந்த பிள்ளைகளுக்கு டைப் 2 டையாபடிஸ் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது?

சிறுவர்கள் மற்றும் வளரும் பருவத்தினர் கீழ்க்காணும் நிலையில் காணப்பட்டால் அவசியம் 10 வயதிலிருந்தே ஒவ்வொரு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை காலை உணவுக்குமுன் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினை பரிசோதித்தல் வேண்டும்.

> அதிக உடல் எடை கொண்டவர்கள் (சிறு பிள்ளைகளுக்கு தனது வயது, உயரம் மற்றும் பாலினத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் எடையை விட 85 சதவீதம் அதிக உடல் எடை இருப்பின் அல்லது தனது உயரத்திற்கு ஏற்ற எடையைவிட 120 சதம் அதிக அளவில் உடல் எடை காணப்பட்டால்)
> டைப் 2 டையாபடீஸ் கொண்ட மிக நெருங்கிய உறவினரைக் கொண்டுள்ளவர்கள்.
> அதிகளவு உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள்.

வளரும் பருவமும் டையாபடீஸ்-சும்

வளரும் பருவத்தினருக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் குறிப்பிட்ட சில பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில்,

> பருவமடையும்போது ஏற்படும் ஹார்மோன் சுரப்பிகளின் மாற்றங்கள்.
> வளரும் பருவத்தினரின் வாழ்க்கை முறை - தனக்கு சமமான ஒரே வயதுடைய இருபாலாரிலும் ஏற்படும் அழுத்தம், செயல்பாடுகள் அதிகரித்தல், ஒழுங்கில்லாத தாறுமாறான வேலைத்திட்டங்கள், உடல் அமைப்பில் அதிக கவனம் செலுத்துதல் அல்லது உணவுப் பழக்கத்தில் உள்ள குறைபாடுகள் / கோளாறுகள்.
> புகை பிடிக்க, மது அருந்த ஆரம்பித்தல்.

அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் டைப் 1 டையாபடீஸ்-ல் மிக விரைவாக தோன்றுகிறது. பொதுவாக 2 முதல் 3 வாரங்களுக்குளளாக வெளிப்படையான அறிகுறிகள் தோன்றும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், சிறு பிள்ளைகள் அதிகளவில் சிறுநீர் கழீப்பர். இப்படி உடலில் உள்ள நீர் இழப்பதினால் தாகம் ஏற்பட்டு அதிக தண்ணீர் உட்கொள்வர். சில குழந்தைகளில் உடலில் உள்ள நீர் அதிகளவில் இழப்பு ஏற்பட்டு பலவீனம், சுறுசுறுப்பின்மை மற்றும் படபடத்தல் போன்றவை ஏற்படும். பார்வையும் மங்கலடையும்.

டைப் 2 டையபடீஸ் பிள்ளைகளில் ஏற்படுத்தும அறிகுறிகள் டைப் 1 டையாபடீஸை விட மிதமானதாகவும் மிகவும் மெதுவாகவும் ஏற்படும். வாரக்கணக்கில் அல்லது சில மாதங்கள் ஆகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் அதிகமாக தண்ணீர் குடித்தல் மற்றும் அதிகளவில் சிறுநீர் கழிக்கும் நிலைகளை கண்டறியலாம். அல்லது உடற்சோர்வு போன்றவற்றை கவனிக்க கூடும். டைப் 2 டையாபடீஸ் உள்ள குழந்தைகளுக்கு சாதாரணமாக கீடோஅஸிடோசிஸ் மற்றும் உடலில் ஏற்படும் தீவிர நீரிழப்பு போன்றவை ஏற்படுவதில்லை.

பெற்றோர்கள் செய்யவேண்டியது...

சிறுவயதில் நீரிழிவு நோய் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்க, குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் உணவுமுறைகளையும் மருத்துவ ஆலோசனைப்படி மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அக்கறை காட்டாவிட்டால் பார்வை போதல், சிறுநீரகச் செயலிழப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கும் சாதகமாகிவிடும். பெற்றோர் குழந்தைகளின் காலை உணவில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒழுங்காக சாப்பிடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். நொறுக்குத்தீனிகள் கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும். தகுந்த கால இடைவெளியில் குழந்தைகளின் ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருப்பது இன்னும் நல்லது.

You may also like ...

கோப் பிராயன்ட் மற்றும் அவரது மகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிராயன்ட்,

கீரைகள் மற்றும் வெந்தயத்தின் பயன்கள்!

கீரைகள் • கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும்