பொய் சொல்லாதீர்கள்!

ஒரு ஊரில் கிருஷ்ணன் என்ற சுயநலமிக்க செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டான். இதனால் வருத்தமடைந்தவன் தனது நண்பன் சோமுவிடம் நடந்ததை கூறி புலம்பினான். சில நாட்கள் கழித்து சோமு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டான். அந்த பை கிருஷ்ணனுடையது என தெரிந்துகொண்ட சோமு அதை அவனிடம் கொடுத்தான்.

சோமுவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட கிருஷ்ணன், ஒரு திட்டம் தீட்டினான் அவன் சோமுவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென சோமுவிடம் கூறினான். சோமு மிகவும் நல்லவன். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவனது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்.

இதனால் இந்த குழப்பத்திற்கு முடிவுகட்ட நண்பர்கள் இருவரும் ஊர் தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், கிருஷ்ணனிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய் என கேட்டார். அதற்கு அவன் 40 தங்க நாணயங்கள் என பொய் கூறினான். இப்போது ஊர் தலைவர் சோமுவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய் என்றார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார்.

இருவரின் பதிலையும் கேட்ட ஊர்த்தலைவர் கிருஷ்ணனைப் பார்த்து, சோமு கண்டறிந்திருப்பது வெறும் 30 தங்க நாணயங்கள், நீ தொலைதிருப்பதோ 40 தங்க நாணயங்கள் எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. இனி யாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ செல்லலாம் என்று கூறினார். இப்போது சோமுவை பார்த்த தலைவர் நீ கண்டுபிடித்திருப்பது கிருஷ்ணனின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள்ளலாம் என்றார். தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த இழப்பை எண்ணி கிருஷ்ணன் வருத்தபட்டான்.

நீதி : எப்போதும் நேர்மையுடன் இருக்க வேண்டும்.

புதிய தொகுப்புகள்