உலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது.
அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள்.
இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர். மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.
மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் (மலேரியா நோய்க்காரணி என்னும் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.
நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.