ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய தினமாக (World Humanitarian Day) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இத்தினத்தை நாடுகளின் அரசாங்கங்களும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித நேயம் கொண்டவர்களும் இணைந்து உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை மோதல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டுள்ள பணிகளில் எட்டிய வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் தருணமாக இத்தினம் விளங்குவதாக ஐ.நா. தகவல் நிலையம் 2010 இல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. உலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது.
ஆரம்பத்தில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதன் வளர்ந்தான்.
அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய மிருகங்களின் தாக்குதல்களைச் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான். மனிதன் குடும்பமாக வாழத்தலைப்பட்டதும் சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது.
மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனர்.
இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது.
ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.
இதன்படி முதலாவது உலக மனித நேய தினம் 2009 ம் ஆண்டு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.